2020 Annual Newsletter

2020  Annual Newsletter

இந்த 2020 எல்லோருக்கும் ஒரு சவாலாக அமைந்த வருடம். இந்த கடினமான வருடத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை, தொகுத்து வழங்கியுள்ளோம். இதை முன்னெடுத்து நிறைவேற்றிய அந்தோணி அவர்களுக்கு பாராட்டுகள். இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.உங்கள் ஒய்வு நேரத்தில் இதை படித்து இன்புற அன்புடன் அழைக்கிறோம்.

RTP Tamil Catholic Association Virtual Mass

RTP Tamil Catholic Association Virtual Mass

RTPTCA invites you to join our monthly virtual mass.


Starting in April 2020, RTPTCA transitioned from mass at Lourdes Matha Church to virtual mass via Google Meet due to COVID-19 restrictions.

Mass is celebrated on the third Sunday of every month at 6:00. Fr. Rex Lumin, Fr. Peter, Fr. Tensing, and Fr. Loyola have celebrated our masses in the last three months.

அனுதின செபமாலை

அனுதின செபமாலை

ஆக்கம் : ராஜி ஆதர்ஷ்

பிரிந்த மனங்களை செபம் இணைத்தது

ஆம், COVID-19 புதிய நச்சுக்கிருமியின் பிடியில் உலகமே சிக்கி தவிக்கின்ற இந்த நேரத்தில் ,அனைவரும் கூண்டு கிளிகளாய் மனைகளிலே அடைபட்டோம். கலங்கியது மனம், பதறியது உள்ளம் – இறைவா, நாம் இந்த வீட்டு சிறையில் சிக்கி இயல்பு வாழ்க்கையை இழந்து விடுவோமோ? ஆண்டவரை ஆலயத்தில் சென்று ஆராதிக்க இயலாமல் போய்விடுமோ? நம் நண்பர்களை சந்திக்கவே இயலாதா? பிள்ளைகள் பள்ளி கூடங்களுக்கு செல்லவே இயலாதா? நாம் அலுவலகங்களுக்கு, பணி இடங்களுக்கு செல்லாமலே இப்படியே கட்டுண்டுவிடுவோமோ? ஆண்டவன் படைத்த அழகிய உலகை காண முடியாதோ? அதை அனுபவிக்க இயலாதோ? என வெதும்பி போன நம் உள்ளங்களுக்கு ஒரே ஆறுதல் நம்முடைய தினசரி செப கூட்டம்.

தொழில் நுட்பத்தின் உதவியால் நாம் அனைவரும் இணைந்தோம். முதல் முறையாக மனம் முழு நன்றி தெரிவித்தது இந்த தொழில்நுட்பத்திற்கு. எந்த ஒரு புது முயற்சிக்கும், வெற்றிக்கும் ஒரு நல்ல தொடக்கம் மிகவும் அவசியம். இந்த நச்சுகிருமி நம் சந்திப்பை, நம் விருதோம்பல்களை தடுத்திருக்கலாம், ஆனால் நம் இறை பக்தியையும் இறை நம்பிக்கையும் தடுக்கவோ தகற்கவோ இயலாது.

RTPTCA உறுப்பினர்களின் முயற்சியால் அனைத்து குடும்பங்களின் தினசரி செபக் கூட்டம் நிகழ்நிலை அழைப்பின் வாயிலாக [Online, virtual] தொழில்நுட்ப உதவியுடன் நம் அனைவரையும் இணைத்தது. தினம் மாலை 6:30 மணியளவில் அனைவரும் நிகழ்வலை அழைப்பில் இணைந்து இறைவனை வணங்கி துதி பாடுகின்றோம். பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை இணைத்தது இந்த பிரார்த்தனை கூட்டம். இறைவனை நம்பி ஓன்று கேட்டால் அதை அவர் கொடுப்பார், அதையே கூட்டமாக சேர்ந்து கோரினால், அதை நிச்சயமாக கொடுப்பார்.

இந்த தினசரி பிரார்த்தனை நாட்களில் ஜெபமாலை ஜெபித்து  இறைவனிடம் மன்றாடி வேண்டி கொண்டதெல்லாம் ஒன்றே ஓன்று தான், இந்த கொடிய Covid-19 நச்சு கிருமியை விரைவில் தடுத்து நிறுத்தவும், அதன் பிடியில் இருந்து நம் பூவுலகை மீட்டு எடுக்கவும் தான். செபம் மற்றும் பாடல்கள் என அனைத்திலும், அனைத்து குடும்பங்களிலும் இருந்து ,குழந்தைகள், பிள்ளைகள், தாய், தந்தை என அனைவரும் மகிழிச்சியுடனும், ஆர்வத்துடனும் பங்கேற்கின்றனர்.

தினமும், மனமானது மாலை 6:30 மணியை தேடி காத்திருக்கின்றது. ஒவ்வொரு புதன் கிழமை தோறும் சிறு குழந்தைகள் அவர்களின் மழலை மொழியில் இறைவனை புகழ்ந்துப் பாடுவதும், பிரார்த்தனை செய்வதும் கேட்பவர் செவிகளுக்கு இன்ப விருந்து. சனி கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரி பிள்ளைகள் ஒன்றாக இணைந்து ஜெபமாலை செய்கின்றனர், ஒவ்வொரு குடும்பங்களும் தலைமை ஏற்று ஜெபமாலையை செவ்வனே செய்து வருகின்றனர்.

இந்த முயற்சியில் நம் குடும்பங்கள் மட்டுமில்லாது அருள் தந்தை  ஞானப்பிரகாசம் மற்றும் அவரது நண்பர்  அருள் தந்தை அருள் அவர்களும் நிகழ்வலை தொடர்பில் இணைந்து நமக்கு அருள்வாக்கு மற்றும் தேவ சிந்தனைகளை சிறப்பாக பகிர்ந்தனர். தேவாலயத்திற்கு நேரடியாக சென்று இறைவனை தொழ இயலாத சூழ்நிலையில் குருவானவர்கள் நம்மிடையே இணைந்து கூறிய தேவ வார்த்தைகள் நம் மனங்களை ஆறுதல் படுத்தியது. இறைவனை ஆராதிக்கும் இந்த ஜெபமாலை பயணம் இன்னும் தொடர்கிறது …

Fourth Annual General Body Meeting

Fourth Annual General Body Meeting

                                                                                         ஆக்கம் : ராஜி ஆதர்ஷ்

RTPTCA யின் 4 வது வருடாந்திர அனைத்து  உறுப்பினர்கள் பொது கூட்டம்,2-பிப்ரவரி,2020  அன்று  St.Andrew’s Church,Fellowship Hall-ல் சிறப்பாக நடைப்பெற்றது. சங்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திருமதி தீபா அவர்கள்  தெய்வீக குரலில் இறைவணக்கம் பாட, நிகழ்ச்சி தொடங்கியது. செயலாளர் திரு ஸ்டான்லி அவர்கள், அனைவரையும் கவரும் விதத்தில் நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பு கலந்து வரவேற்புரை ஆற்றி, அனைவரின் கைதட்டல்களை பெற்றார்.

திருமதி வித்யா அவர்களின் தலைமையில் அற்புதமாக தயாரான 2019 ஆம் வருட ஆண்டு மலரை அவர் வெளியிட, செயலாளர் திரு ஸ்டான்லி அவர்கள் அதை பெற்றுக்கொண்டார். இந்த ஆண்டு மலர், 2019 ஆம் வருட நிகழ்வுகளின் தொகுப்பாக சங்க உறுப்பினர்களின் கவிதை, கட்டுரை, கலைகளின் கலவையாய் அனைவரின் திறமைகளை பிரதிபலித்தது. இது மிகப்பெரும் கூட்டு முயற்சி, திருமதி வித்யா அவர்களின் தலைமையில் அற்புதமாக தயாரான புத்தகம் .

துணைத் தலைவர் திரு அந்தோணி அவர்கள் 2019 ஆம் ஆண்டு நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஜனவரி முதல் டிசம்பர் வரை நம் கண்முன் வந்து நிறுத்தினார். பின்னர் எந்த ஒரு நிர்வாகத்திற்கும் மிகவும் முக்கியமான நிதி அறிக்கையை திரு ஜோசப் அவர்கள் மிக தெளிவாக அனைவர்க்கும் புரியும் வகையில் செம்மையாக விளக்கினார். இம்முறை அனைவருக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இது நிர்வாகம் உறுப்பினர்களிடம் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறது என்பதை மிக தெளிவாய் காட்டுகிறது.

அடுத்தபடியாக, 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த திருமதி சுஜா, திருமதி அனிதா மற்றும் திருமதி ராஜி ஆகியோரை தலைவர் திரு சவேரியார் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். திரு லாசர் அவர்கள் நிர்வாக விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். துணைத் தலைவர் திரு அந்தோணி அவர்கள் 2020 ஆண்டின் முன்னோட்டம், எப்படி முன்னோக்கி செயல்பட உள்ளோம் என உரையாற்றினார்.

திரு லாசர், திரு. கிங்ஸ்லி  மற்றும் திரு ஸ்டான்லி அவர்கள் நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இருந்து விலகி மற்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுத்தனர் அவர்களை மற்றும் அவர்களின் பங்களிப்புகளை கௌரவப்படுத்தும் விதமாக அவர்கள் இருவருக்கும் தலைவர் திரு சவேரியார் அவர்கள் மலர்க்கொத்து மற்றும் நற்சான்று மடல்களை வழங்கி பெருமை படுத்தினார்.

அதன்பின் 2020 ஆம் ஆண்டிற்கான தன்னார்வ உறுப்பினர்களுக்கான தேவை தெரிவிக்கப்பட்டன. கேள்வி பதில் கூட்டத்தொடர்வு சிறப்பாக நடைபெற நிகழ்ச்சி நிறைவிற்கு வந்தது. துணைத் தலைவர் திரு அந்தோணி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழிச்சி இனிதே நிறைவுற அனைவரும் கொண்டுவரப்பட்ட தேனீர், சிற்றுண்டி அருந்தியபின் நிகழிச்சி அறையை துப்பரவு செய்து விடைபெற்றனர்

இறைவனின் அருளால் சிறப்பாக நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் இது போன்ற ஒவ்வொரு நிகழ்வுக்கும் உங்கள் பங்கேற்பும், ஆதரவும் மிக அவசியம்.

கிறிஸ்து பிறப்பு விழா – 2019

கிறிஸ்து பிறப்பு விழா – 2019

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின்  வருடாந்திர கிறிஸ்து பிறப்பு விழா

படைப்பு: ராஜி ஆதர்ஷ்

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க உறுப்பினர்களின் வருடாந்திர கிறிஸ்துமஸ் விழா இந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி Twin lakes Club House, Cary யில் வெற்றிகரமாக நடந்தது. இந்த வருட விழாவினை திரு ஸ்டான்லி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

வண்ணமிகு கோலம் வாயிலில் வரவேற்க, அழகிய தோரணை அலங்காரம் கண்களை கவர இனிதே ஆரம்பமானது கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டம்.

அனைத்து குடும்பங்களும் பாரம்பரிய உடையில் அமர்ந்திருக்க, பாடகர் குழு வரவேற்பு பாடலை பாட, அருள்தந்தை லூர்துராஜ் அவர்கள் திருப்பலியை பிற்பகல் மூன்று மணிக்கு துவங்கினார்.

அருள்தந்தை லூர்து ராஜ், கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவின் பிறப்பு மட்டும்  அல்ல நாம் மனத்தூய்மையோடு, குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது என்னும் செய்தியை  அனைவருடனும் பகிர்ந்தார். வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் இடம், நிம்மதி. கிடைக்கும் ஒரே இடம் என்பதை உணர்த்தினார்.

மாலை சிற்றுண்டிக்கு பின் 5மணியளவில் திருமதி.கோல்டா மற்றும் திருமதி.ராஜி தொகுத்து வழங்க, விழா ஆரம்பமானது. தலைவர் திரு.சவேரியார் வரவேற்புரை வழங்கினார். ஆன்மீக ஆலோசகர் திருத்தந்தை.ஞானப்பிரகாசம், தன்னால் கிறிஸ்துமஸ் விழாவிற்கு வர இயலா விட்டாலும் தனது அன்பு செயதியை படக்காட்சியாக அனுப்பியிருந்தார்.

முதல் நிகழ்ச்சியாக சிறுவர்கள் இயேசு பிறப்பை நாடகமாக நடித்து காட்டினார்கள்.  இந்த நிகழ்ச்சியை திருமதி. ரூபா சிறப்பாக வடிவமைத்திருந்தார்கள். இரண்டாவதாக திரு. ஜெரால்டு, திருமதி. நிர்மலா, திருமதி. கோல்டா, திருமதி. சூசன் ஆகியோர் 80களின் carol இசை நிகழ்ச்சியை கண்முன் அருமையாய் கொண்டுவந்தனர்.

அடுத்தபடியாக சிறுமிகள் நடனம் கலகலக்க அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததால் மீண்டும் ஆடுமாறு கோரினர். சிறுமிகளும் அதே உற்சாகத்துடன் திரும்பவும் ஆடி அசத்தினர.  அடுத்தபடியாக இயேசு பிறப்பின் பின்னணியில்  இக்கால நடைமுறையை கண்முன் ரசிக்கும் விதத்தில் பெரியவர்கள் நடத்தி அசத்தினார்கள்.

அடுத்து சிறுவர்களின் இசை நிகழிச்சி கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாய் அமைந்தது. பின் நம் அழகு பதுமைகளின் அற்புத நடனம் காண்போர் கண்ணை கவர்ந்தன, அடுத்தபடியாக, திருமதி. நிர்மலா அவர்களின் தலைமையில் இனிமையான பாடல்களின் இசை தொகுப்பு மூலமாய் அனைத்து குடும்பங்களும் பங்கேற்கும் விதமாக பாடல் வரிகள் திரையில் காண்பிக்கப்பட அனைவரும் சேர்ந்து அழகாய்ப் பாடினார்கள்.

வருடாவருடம் நடைபெறும் விவிலிய வினாவிடை நிகழ்ச்சி இம்முறை நவீன தொழிநுட்ப உதவியால் கைபேசியில் இருந்தபடியே அருமையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திரு. ஜெயராஜ் மற்றும் திரு. ஸ்டான்லி அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.

அடுத்து ஆஷீஷ் பிரான்சிஸ்  மற்றும் ஆல்ட்ரின அந்தோணி இணைந்து வழங்கிய கிட்டார் & டிரம்ஸ் இசை நிகழ்ச்சி மிக அருமையாக அனைவரையும் இருக்கையில் கட்டி போட்டது.

எப்பொழுதும் பாடி அசத்தும் பாடகர் குழு, பாட்டு மட்டும் அல்ல எங்களுக்கு பாடிக்கொண்டே ஆடவும் தெரியும் என “கொட்டும் பணியில் குளிர்நிலா” என ஆடிப் பாடி அசத்தினார்கள் .

புதிய உறுப்பினர்களை குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஒருவொரு குடும்பமும் இன்னொரு குடும்பத்தை வீட்டிற்கு அழைத்து உணவு பரிமாறி அறிமுகப்படுத்தும் விதமாக, காகிதத்தில் பெயர்கள் எழுதப்பட்டு ஒருவொரு குடும்பமும் ஒரு பெயர் எடுத்து அறிவித்தனர், திரு ஸ்டான்லி அவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்

இளைஞர்களின் இசைக்குழு ஆயத்தமாகும் நேரத்தில் திருமதி.கோல்டா மற்றும் திருமதி.ராஜி அனைத்து குடும்பகளின் தமிழ் ஆளுமையை பரிசோதிக்கும் வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருக்குறளை சொல்லவைத்தது, அனைவர் மத்தியில் வரவேற்பு பெற்றது

விழாவின் கடைசி நிகழ்ச்சியை மிக அருமையாக இளைஞர்களின் இன்னிசை குழு வழங்கினார்கள். திரு. லாசர் மற்றும் திரு. ஜெரார்ட் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தந்தார்கள். ஜெயராஜ் அவர்கள் நன்றியுரை தெரிவிக்க  இரவு விருந்திற்குப்பின் இன்பத்திருநாள் நிறைவிற்கு வந்தது

என்ன ஓர் அருமையான தினம்!! அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தத் தினம். இந்த நிகழ்வுகள் இறைவனால் கொடுக்கப்பட்டப் பரிசு, இதே ஆனந்த உணர்வோடு எல்லா நிகழ்வுகளிலும் பங்குக் கொள்ள உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். நன்றி.

Xmas 2019 Message from RTP Tamil Catholics Spiritual Director Fr. Gnanapragasam.

Video: Joseph Prem Anand

Children Mass – 2019

RTPTCA Children mass held on September 15, 2019 Sunday. குழந்தைகள் தங்கள் மழலை குரலில் இறைவனை புகழ்வதை கேட்டு மகிழுங்கள்.

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்க குழந்தைகள் திருப்பலி
நாள் : செப்டம்பர் 15, 2019